Skip to content

Counting and Cracking

என்னுடைய தாய் நாட்டின் துயரக் கதையையும், இலங்கை சிங்கள இனவாத ஆட்சியாளர்களாலும் தமிழ்ப் புலிகளாலும் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளையும் வெளிநாட்டு மேடையொன்றில் நின்று நான் சொல்வதில் உண்மையில் பெருமைப்படவோ, மகிழ்ச்சியடையவோ ஏதுமில்லை. எனினும் ஒரு கலைஞனாக அது என்னுடைய துயரார்ர்ந்த கடமையாக இருக்கிறது. என் வாழ்நாள் முழுவதும் ஒரு எழுத்தாளனாகவும் நடிகனாவும் நான் இலங்கையின் கண்ணீரையும் இரத்தத்தையும் இறந்த உடல்களையுமே மக்கள் முன் வைத்துவருகின்றேன். “In the dark times, Will there also be singing? Yes, there will also be singing, About the dark times” என்னும் Bertolt Brecht இனுடைய வார்த்தைகள் இதன் மூலமாக நிறைவேற்றப்படுகின்றது.

நான் பால பருவத்திலேயே கூத்துக்காரனாகி விட்டேன். நான் நடித்த முதற் கூத்து ‘பண்டாரவன்னியன்’. அண்ணாவியார் நாரந்தனை சின்னப்புவின் இயக்கத்தில் தென்மோடிப் பாணியிலமைந்த அந்தக் கூத்தில் எனக்கு ‘காக்கை வன்னியன்’ வேடம் கொடுக்கப்பட்டது. அதன் பின்பு நான் நடித்தவற்றில் மிகவும் பிரபலமானது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது வீதி நாடகமான ‘விடுதலைக்காளி’ ஆகும். தாயகத்தில் இருக்கும் வரை என்னுடைய இந்தக் கால்கள் ஆடிக்கொண்டுதானிருந்தன.

புலம்பெயர்ர்ந்த பின்பு நான் எழுதிய நாடகங்கள் கனடாவிலும் பாரிஸிலும் மேடையேற்றப்பட்;போதும் எனக்கு நாடகங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. நான் கடைசியாக மேடையேறி ஆடிய வருடம் 1987. ‘கண்ணன் வருவானா’ என்றொரு நாடகம். இந்திய இராணுவம் இலங்கைக்கு வருமா என்ற கருப்பொருளைக் கொண்டிருந்தது அந்த நாடகம். நாடகம் முடிந்து நாங்கள் மேக்–அப்பை (make-up) தேங்காய் எண்ணை பூசி அழிக்க முன்னரே இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்து விட்டது. நான் என் தாய்நிலத்திலிருந்து அவர்களாலேயே வெளியேறினேன். சரியாக முப்பது வருடங்கள் கழித்து மறுபடியும் ஆட அழைப்பு அவுஸ்ரேலியாவிலிருந்து வந்தது.

2018, செப்டம்பர்ர் மாதம், சிட்னியின் புகழ்பெற்ற ‘BELVOIR’ நாடகக் கொம்பனி என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களுடைய ‘Counting and Cracking’ ஆங்கில நாடகத்தில் நடிக்கச் சம்மதமா எனக் கேட்டார்கள். இல்லையென்ற சொல்லே நம் அகராதியில் இல்லையென்பதால் வாட்ஸ்–அப்பிலேயே (WhatsApp) ‘யேஸ்… யேஸ்…’ என்று மண்டையை அதிகப்படியாகவே ஆட்டிவிட்டேன். நமக்குத்தான் ஆங்கிலத்தில் ஒரு வசனம் கூடத் தடக்குப்படாமல் பேச வராதே என்றெல்லாம் விபரமாக யோசிப்பதற்கான அவகாசத்தை தலைக்கு, ஆடிய கால்கள் அனுமதிக்கவில்லை.

நாடகப் பிரதியை எனக்கு அனுப்பிவைத்தார்கள். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூற்றைம்பது பக்கங்களைக்கொண்ட நாடகப்பிரதியை அகராதியின் துணையுடன் உருண்டு பிரண்டு ஒருவழியாக ஒரே நாளில் படித்து முடித்தேன். அடுத்த கட்டம் ‘ஓடிசன்’ (audition) எனப்படும் நடிகர் தேர்வு. அதுவும் வாட்ஸ்–அப்பில (WhatsApp) தான் நடந்தது. என்னுடைய ஓட்டை ஆங்கிலத்தைச் செவிமடுத்த இயக்குனர் ஏமனும் நாடகத்தை எழுதிய சக்திதரனும் அந்த ஓட்டையைத் தங்களால் அடைத்துவிட முடியுமென்று நம்பியிருக்க வேண்டும். ஆனால் வே~ப் பொருத்தமோ மிக நன்றாக இருந்தது. ஏழு பொருத்தமும் அம்சமாகப் பொருந்தியிருந்தது. 21 வருடங்களாக வெலிகடைச் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் கைதியின் வேடம்.

டிசம்பர் மாதம் முதல் தேதி அவுஸ்ரேலியாவில் போய் இறங்கினேன். நான் போவதற்கு ஒரு மாதம் முன்பாகவே நாடக ஒத்திகை ஆரம்பித்து நடந்துகொண்டிருந்தது. பாரிஸில் ‘த லோயல் மேன்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்ததால் நான் தாமதமாகப் போக நேர்ந்தது. ஒத்திகை முடிந்து நாடகம் சிட்னி நகரில், சனவரி மாதம் 11ஆம் தேதி அரங்கேறியது. பெப்ரவரி 2ஆம் தேதி வரை தினசரிக் காட்சிகளாக நாடகம் நிகழ்த்தப்பட்டது. ஒவ்வொரு காட்சியின் போதும் 500 பார்ர்வையாளர்களைக் கொள்ளக்கூடிய அரங்கம் தவறாமல் நிறைந்தது.

அந்த நாடகத்தில் பதினாறு நடிகர்ர்கள் ஐம்பது கதாபாத்திரங்களில் நடித்தோம். ஒவ்வொரு நடிகரதும் கலாச்சார–புவியியல் பின்னணிகள் வேறுவேறு. நதி கமல்வீரவும் நிப்புனி சாரதாவும் இலங்கையிலிருந்து வந்த சிங்களவர்கள். ராடி அவுஸ்ரேலியாவின் பூர்வகுடியான அபொரிஜனி பெண். அகிலன் நியூஸிலாந்திலிருந்து வந்த ஈழத் தமிழர். வை~;ணவி, ~pவ், நிக், ஜெய், ராஜ் அவுஸ்ரேலியாவில் வாழும் இந்தியர்கள். மோனிகா (F)பிஜியிலிருந்து வந்தவர். காந்தி மக்கன்ராயரும் மன்றோவும் நீண்ட காலத்திற்கு முன்பே இலங்கையிலிருந்து வெறியேறி சிட்னியில் குடியேறிய பறங்கியர்கள். பிரகாஷ் பெல்வாடி, இந்தியாவிலிருந்து வந்தவர். சுகன்யா மலேசியாவிலிருந்து வந்தவர். ஹஸன் பாலஸ்தீனர். நாடகம் தொடர்ந்து மார்ச் மாதம் அடலைட் நகரிலும் நடந்தது. இடையில் கோவிட் அலையால் எங்களது பயணம் தடைப்பட்டாலும், இந்த வருடம் மறுபடியும் நாடகத்தை எடின்பரோவிலும், பெர்மிங்காமிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக நிகழ்த்தினோம். இம்முறை நடிகர்களில் சிலர் மாறினார்கள். Rodney Afif, Shanaka Amarasinghe, Sukhbir Singh, Abbie Lee, Kaivalya, Kalieaswari Srinivasan, Harish Vijaya, Biman Wimalaratne, Emma Harvie ஆகிய நடிகர்கள் அரங்கில் புதிதாகத் தோன்றினர். இசைக் கலைஞர்களாக Kranthi Kiran Mudigonda, Janakan Raj, Venkhatesh Sritharan ஆகியோர் அரங்கை வசியம் செய்து வைத்திருந்தார்கள்.

அவுஸ்ரேலியாவின் புகழ்பெற்ற நாடகர் ஏமன் இந் நாடகத்தின் இயக்குனராகப் பணியாற்றியிருந்தார். நாடகத்தை சக்திதரன் எழுதியிருந்தார். இவர் சுதந்திர இலங்கையின் முதல்-தலைமுறை அரசியல்வாதியும் ‘அடங்காத்தமிழர்’ என அடைமொழி பெற்றவருமான சுந்தரலிங்கத்தின் கொள்ளுப் பேரன். நாடகம் இரண்டு இடைவேளைகளுடன் மூன்றரை மணிநேரம் நடக்கும். நாடகத்தின் கதையைச் சுருக்கமாக விபரிக்க நினைக்கிறேன். அரங்கில் காலம் முன் பின்னாக நகரும் நாடகம் இது.

1956இல் இலங்கையில் தனிச் சிங்கள மொழிச் சட்டம் உருவாவதில் தொடங்கி, 1983 இனப்படுகொலை ஊடாக 2004இல் சிட்னியின் அகதிகள் தடுப்பு முகாம் வரை சென்று கதை முற்றுப்பெறுகிறது. இலங்கையின் அரை நூற்றாண்டு கால வரலாற்றையும், நான்கு தலைமுறைகளின் கதையையும் பேசும் நாடகம் மிக நேரடியாகவே அரசியலைப் பேசுகிறது. இனப்படுகொலைகள், இலங்கைச் சிறைகளில் வதைக்கப்படும் தமிழர்கள், இலங்கை அரச படைகளின் கொலைபாதகம் ஆகியவற்றைப் பேசும் நாடகம், கூடவே தமிழ் இயக்கங்களின் பயங்கரவாதம், புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளிற்காக வேலை செய்பவர்களின் அராஜகங்கள் போன்றவற்றையும் பேசுகிறது. இலங்கைத் தீவில் இன மத வேறுபாடின்றிச் சாதாரண சனங்கள் கலந்தும் மகிழ்ந்தும் வாழ்ந்திருந்த காலத்தை இனவாத அரசியல் எவ்வாறு பிய்த்துப்போட்டது என்பதைச் சித்திரிக்கும் இந் நாடகத்தின் ஆதார மொழியாக கொல்வின் ஆர்.டி. சில்வாவின் புகழ்பெற்ற வாக்கியம் அமைந்திருக்கின்றது. இந்த வாக்கியம் நாடகத்தில் திரும்பத் திரும்ப அழுத்தமாக வலியுறுத்தப்படுகிறது:

“இரு மொழியென்றால் ஒரு நாடு
ஒரு மொழியென்றால் இரு நாடு.”

நாங்கள் நடிகர்கள். ஆனால், இந் நாடகத்தில் நாங்கள் வெறும் நடிகர்களாக மட்டும் இருக்கவில்லை. ஒத்திகையில் நாடகம் வளர வளர நிறைய விவாதித்தோம். எங்கள் கருத்துகளை இயக்குனரோடும் சக்திதரனுடனும் பகிர்ந்துகொண்டோம். தமிழரும், சிங்களவரும், பறங்கியரும், அவரவர் பார்வையோடும் அனுபவங்களோடும் இலங்கையின் இனம்–பண்பாடு–அரசியல் குறித்த பிரச்சினைகளை அணுகிப் பேசினோம். இவ்வாறு தான் நாடகத்தின் இறுதி வடிவம் உருவாகியது.

நாடகம் நிகழ்ந்த இடங்களிலெல்லாம் பார்வையாளர்களில் முக்கால்வாசிப் பேர் இலங்கையர் அல்லாத வெளிநாட்டவரே. எனினும் அந்தந்த நகரங்களில் குடியேறியிருக்கும் இலங்கை மக்களும் காட்சிகளிற்கு பெருமளவில் வந்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தார்கள். ஒவ்வொரு காட்சியும் முடியும் போது பார்வையாளர்கள் தங்களது கருத்துகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். குறிப்பாக வெளிநாட்டவர்களிற்கு இலங்கை இன முரண்பாட்டின் வரலாற்றையும் யுத்தத்தின் பாதிப்புகளையும் புரிந்துகொள்வதற்கான தொடக்கக் குறுக்குவெட்டுச் சித்திரமாக இந்த நாடகம் அமைந்திருக்கிறது என்பது அவர்களது பேச்சிலிருந்து தெரிந்தது.

“சாதாரண மனிதர்கள் கஷ்டங்களினாலும் வலிகளினாலும் சொரியும் கண்ணீருக்கு முன்னால் இனவாத ஊளைக்கூச்சல்களிற்கு எந்தப் பெறுமதியுமில்லை என்பதை அரங்கிலிருந்த பார்வையாளர்களின் கண்ணீர் நிரூபித்தது.”

நாடகத்தில் இலங்கை அரசு மீதும் சிங்களப் பேரினவாதத்தின் மீதும் கூர்மையான விமர்சனங்கள் நிறைந்திருந்தது போலவே மொண்ணைத் தமிழ்த் தேசியவாதம் பேசிய அரசியல் கட்சிகள் மீதும் தமிழ்ப் புலிகளின் மனிதவுரிமை மீறல்கள் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த விமர்சனங்கள் அனைத்துமே ஒரு தமிழ்க் குடும்பத்தின் நான்கு தலைமுறைகளின் உணர்ச்சிமயமான கதையைச் சொல்வதன் ஊடாகவே வெளிப்படுத்தப்பட்டன. தமிழ்–சிங்களம் எனக் கன்னை பிரித்து மோதிக்கொள்ளும் கேவலமான இனவாத அரசியல், அந்த ஒற்றைக் குடும்பத்தின் கதையால் அரங்கில் தோற்கடிக்கப்பட்டது என்றே நான் நம்புகிறேன். சாதாரண மனிதர்கள் க~;டங்களினாலும் வலிகளினாலும் சொரியும் கண்ணீருக்கு முன்னால் இனவாத ஊளைக்கூச்சல்களிற்கு எந்தப் பெறுமதியுமில்லை என்பதை அரங்கிலிருந்த பார்வையாளர்களின் கண்ணீர் நிரூபித்தது.

இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தின் கொடூர முகத்தையும், ஒற்றை ஆட்சியின் வன்முறையையும், தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளையும், பறிக்கப்பட்ட சிறுபான்மை இனங்களது உரிமைகளையும் குறித்த செய்திகளை அனைத்துலக மக்கள் முன்பு எடுத்துச் செல்வது பாதிக்கப்பட்ட மக்களதும் சனநாயகச் சக்திகளதும் நோக்கமாகவும் பகீரதப் பிரயத்தனமாகவும் இருக்கிறது. ஆனால் அனைத்துலக மக்கள் முன்னே ஒருதலைப்பட்சமாக வைக்கப்படும் எந்தச் செய்தியும் வதந்திக்கு நிகரானதாகவே கருதப்படும். இலங்கையில் பயங்கரவாதத்தையும் மனித உரிமை மீறல்களையும் நிகழ்த்திய – நிகழ்த்திக்கொண்டிருக்கும் அனைத்துத் தரப்பையும் நாம் கண்டித்து நம் பரப்புரையை முன்வைக்கும் போதுதான் அந்தப் பரப்புரை பக்கச் சார்பற்றதாகக் கருதப்பட்டுப் பரிசீலிக்கப்படும். தனிப்பட்ட முறையில் நம் ஆன்மாவிற்கும் அதுவே தார்மீகத் தைரியத்தை வழங்கி நம்மைத் தொடர்ச்சியான இயங்கு நிலையிலும் வைத்திருக்கும். ஆந்த வகையில் ‘கவுண்டிக் அன்ட் கிராக்கிங்’ நாடகம் நம்முடைய முக்கியமானதும் சரியானதுமான பரப்புரைக் கருவியாக இருக்கிறது.

ஒரு நாடகம் எவ்வளவு தூரத்திற்கு மக்களின் மனதில் சிந்தனையைத் தூண்டும், மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமையுடையது? இளமையில் பார்த்த ‘அரிச்சந்திரா’ நாடகம் தனது சிந்தனையைத் தூண்டி தன்னைச் சத்தியத்தை நோக்கித் திருப்பியது எனக் காந்தியார் சொன்னதாக நாம் படித்திருக்கிறோம். என். கே. இரகுநாதனின் ‘கந்தன் கருணை’ நாடகமும் குழந்தை மா. சண்முகலிங்கத்தின் ‘மண் சுமந்த மேனியர்’ நாடகமும் மக்களிடையே ஏற்படுத்திய எழுச்சியை நாம் நேரிலேயே கண்டிருக்கிறோம். இலங்கையில் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்றையும் ஈழப் போராட்ட வரலாற்றையும் எழுதும்போது இந்த நாடகங்களைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது.

இந்த நாடகத்தை இலங்கைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்பது நாடகக் குழுவினரின் கனவு. என்னுடைய சொந்த மக்களிடம் எங்களுடைய கடந்தகாலக் கதையையும் கண்ணீரையும் நேரடியாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது என் கனவு. கனவுகள் மெய்ப்பட வேண்டும்!


The opinions expressed in this article are those of the author. They do not reflect the opinions or views of Debas.

Cover Photo: Belvoir St Theatre

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *